தி.மு.க.வினரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியினர் 2 பேர் கைது
இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட மோதலில் தி.மு.க. வினரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்றிருந்த தி.மு.க.வினருக்கும், நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியதால் இருதரப்பினரும் தாக்கி கொண்டார்கள்.
இந்த மோதல் சம்பவத்தில் தி.மு.க.வை சேர்ந்த 6 பேர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர், 3 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தார்கள். மேலும், அந்த பகுதியில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டார்கள்.
2 பேர் கைது
இந்தநிலையில் சம்பவம் நடந்த இடத்தை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். அதன்படி தி.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கணேஷ்பாபு, விஜய் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதேபோல் நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த புகாரின்பேரில், தி.மு.க.வினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.