திண்டிவனம் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளை மர்மநபர்கள் 2 பேருக்கு வலைவீச்சு

திண்டிவனம் அருகே மூதாட்டியின் வாயில் துணியை திணித்து அவரை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-27 18:45 GMT

மயிலம், 

திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை நாப்பாளைய தெருவை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 90). தனியாக வசித்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடிசை வீட்டில் படுத்து தூங்கினார்.

இந்த நிலையில் நள்ளிரவில் நாகம்மாளின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 2 பேர், அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் சத்தம் போட்டார்.

உடனே மர்மநபர்கள் அங்கிருந்த துணியை எடுத்து நாகம்மாளின் வாயில் திணித்தனர். பின்னர் கயிற்றால் அவரை கட்டிப்போட்டு விட்டு அவர் அணிந்திருந்த 3 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் நாகம்மாள் வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

வலைவீச்சு

அப்போது அங்கு அவர் கயிற்றால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு, மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நாகம்மாள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்