புரோக்கரை கடத்தி நகை, பணம் பறித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது
திருச்சியில் புரோக்கரை காரில் கடத்தி நகை, பணம் பறித்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சியில் புரோக்கரை காரில் கடத்தி நகை, பணம் பறித்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
புரோக்கர்
திருச்சி தென்னூர் மூலக்கொல்லை தெருவை சேர்ந்தவர் தாவூத்பாட்ஷா. இவரது மகன் சாதிக்பாஷா (வயது 30). இவர், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் தங்கத்தை வாங்கி வியாபாரிகளிடம் கொடுத்து கமிஷன் பெறும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி நள்ளிரவு 11 மணி அளவில் தனது தம்பி முகமதுசெரீப், நண்பர் ஜூபேர் ஆகியோருடன் திருச்சி விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு வெளிநாட்டில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் 20 கிராம் எடையுள்ள 2 கைச்சங்கிலிகளை வாங்கிக்கொண்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
காரில் கடத்தல்
நேற்று முன்தினம் அதிகாலை 1.45 மணி அளவில் தென்னூர் ஒய்.எம்.சி.ஏ. நர்சரி பள்ளி அருகே கார் வந்த போது, அவர்களை பின்தொடர்ந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது.
அப்போது, காரில் இருந்து, நகை மற்றும் ரூ.3 லட்சம் இருந்த பையுடன் இறங்கிய சாதிக்பாஷாவை, அந்த கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி நகை, பணத்துடன் காரில் கடத்திச்சென்றனர். அப்போது, காரில் ஏறி தப்ப முயன்ற திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த கதிரேசன் (21) என்பவர் கீழே விழுந்தார்.
நகை, பணம் பறிப்பு
அவரை பிடித்து பொதுமக்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், சாதிக்பாஷாவை கடத்தி சென்றது, பட்டுக்கோட்டையை சேர்ந்த சமீர், பிரசாந்த், மதுரையை சேர்ந்த குமார், அரியமங்கலம் சீனிவாசநகரை சேர்ந்த ஹக்கீம்ஜியாவுதீன் (36), அப்துல்கபூர் (29) உள்ளிட்டோர் என்பது தெரியவந்தது.
இதற்கிடையே நகை, பணத்தை பறித்துக்கொண்டு சாதிக்பாஷாவை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அக்கரைப்பட்டி பிரிவில் இறக்கி விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கதிரேசனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
மேலும் 2 பேர் கைது
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவே இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஹக்கீம்ஜியாவுதீன், அப்துல்கபூர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். சமீர், பிரசாந்த், குமார், பிரதீப் உள்ளிட்ட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.