சாலையில் சுற்றித்திரிந்த 2 மிளாக்கள்

குளச்சலில் நள்ளிரவில் சாலையில் மிளா குட்டிகள் சுற்றித்திரிந்தன. அவை இறைச்சிக்காக பிடித்து வரப்பட்டதா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-01-06 18:45 GMT

குளச்சல்:

குளச்சலில் நள்ளிரவில் சாலையில் மிளா குட்டிகள் சுற்றித்திரிந்தன. அவை இறைச்சிக்காக பிடித்து வரப்பட்டதா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலையில் திரிந்த மிளாக்கள்

குளச்சல் நகராட்சி கடற்கரை பகுதியாகும். இதன் அருகே வனப்பகுதி கிடையாது. இந்தநிலையில் குளச்சல் தும்பாக்காடு குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மிளாக்கள் நின்று கொண்டிருந்தன. இதனைக் கண்ட அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில் மிளாக்களை படம் பிடித்து வேளிமலை மற்றும் குலசேகரம் வனத்துறைக்கு அனுப்பி வைத்து தகவல் தெரிவித்தார்.

உடனே வனத்துறை ஊழியர்கள் தும்பக்காடு குடியிருப்பு பகுதிக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த மிளாக்கள் அங்கிருந்து மாயமாகி விட்டன. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் அந்த பகுதியில் தேடிப்பார்த்தும் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இறைச்சிக்காக...

இந்தநிலையில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவு படி உதவி வன அலுவலர் சிவகுமார் தலைமையில் வேளிமலை, குலசேகரம் சரக வன ஊழியர்கள் நேற்று மதியம் மீண்டும் குளச்சல் வந்து வி.கே.பி. பள்ளி அருகே மற்றும் பர்னட்டிவிளை ஆகிய பகுதி தோட்டங்களில் தேடினர். ஆனால் மிளாக்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து உதவி வன அலுவலர் சிவகுமார் கூறுகையில், மணக்குடியில் வனப்பகுதி உள்ளது. அங்கிருந்து வழி தவறி வந்திருக்கலாம். வழி தவறி வந்த மிளாக்களை மீட்க தேடி வருகிறோம். தேவைப்பட்டால் தொடர்ந்து வன ஊழியர்கள் இங்கு 4 நாட்கள் வரை தங்கி பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

அதே சமயத்தில் சாலையில் சுற்றித்திரிந்த மிளாக்களை இறைச்சிக்காக யாராவது வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக பிடித்து வந்தார்களா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு அருகே பிலாவிளை பகுதியில் ஒரு வாழைத்தோட்டத்தில் இரவு இதேபோல் மிளா ஒன்று சுற்றித்திரிந்ததாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண்டைக்காடு போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அப்போதும் வனத்துறையினர் வருவதற்கு முன்பு மிளா அங்கிருந்து மாயமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்