மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் 2 பேர் கைது
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளை கொல்ல முயன்ற மதுரையை ேசர்ந்த கூலிப்படையினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளை கொல்ல முயன்ற மதுரையை ேசர்ந்த கூலிப்படையினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி அபிராமி நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. பூண்டு வியாபாரியான இவர் கடந்த மார்ச் 2-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் என்ற யுவராஜ் குமார் (வயது 29), விக்னேஷ் (29) ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் மேற்படி 2 பேரும் கடந்த மார்ச் 6-ந் தேதி கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணமாக விருதுநகர் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இருவருக்கும் வெட்டுக்காயம் இருந்ததால் இருவரும் சிகிச்சைக்காக கடந்த மார்ச் 22-ந் தேதி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
கொலை முயற்சி
கடந்த 18-ந் தேதி 8 பேர் கொண்ட கும்பல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பொதுவார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவராஜ்குமாரையும், விக்னேசையும் தாக்கும் நோக்கில் காரில் வந்தனர். வந்தவர்களில் 3 பேர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கார்களின் அருகிலேயே நின்று கொண்டு 5 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் யுவராஜ் குமாரும், விக்னேசும் அனுமதிக்கப்பட்டிருந்த 4-வது தளத்திற்கு சென்றனர்.
ஒருவர் மட்டும் கண்காணிப்பு கேமரா அருகில் நின்று கொண்டு யாரும் வருகிறார்களா என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். மற்றொருவர் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் மீது தூவ மிளகாய் பொடியுடன் உள்ளே சென்றார். மற்ற 3 பேரும் யுவராஜ்குமாரையும், விக்னேசையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் சிலம்பரசன் மற்றும் அழகுராஜ் ஆகிய இருவரும் அந்த கும்பலை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் யுவராஜ் குமாருக்கு தலையில் வெட்டுப்பட்ட நிலையில் அவர் ரத்தம் வழிய ஆஸ்பத்திரியின் பொது வார்டிற்குள் ஓடினார். அப்போது அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகள் பதறியடித்து அலறினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து ஓடி காரில் தப்பி சென்றது.
இதுதொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை பிடிப்பதற்கு 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
2 பேர் கைது
விசாரணையில் கொலை செய்ய வந்த கும்பலில் மதுரை தனக்கன்குளம் அம்பேத்கர் நகரை சேர்ந்த கூலிப்படையினர் சரவணன் (29), தங்கமலை (27) ஆகிய இருவரும் வந்ததாக தெரியவந்தது. இந்தநிலையில் அவர்களை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். போத்திராஜன் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.