மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி லாரி டிரைவர்கள் 2 பேர் பலி

க.பரமத்தி அருகே வேலைக்கு சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி லாரி டிரைவர்கள் 2 பேர் பலியாகினர்.

Update: 2022-09-16 17:49 GMT

லாரி டிரைவர்கள்

கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 45). சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் சேட்டு (35). இவர்கள் 2 பேரும் கரூரில் உள்ள ஒரு கல்குவாரியில் லாரி டிரைவர்களாக பணியாற்றி வந்தனர். இதில் சேட்டு அப்பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.இந்தநிலையில் நேற்று காலை உதயகுமார் தனது வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். அப்போது செல்லும் வழியில் சேட்ைடயும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு உதயகுமார் கரூர்-கோவை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

2 பேர் பலி

க.பரமத்தி அருகே உள்ள மின் உற்பத்திக்கழக அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே கோவையில் இருந்து அரியலூர் நோக்கி கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், அனப்புலா பகுதியை சேர்ந்த சுகாஸ் ஹரி (31) என்பவர் ஒரு காரை ஓட்டி வந்தார்.அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே உதயகுமார், சேட்டு ஆகியோர் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட உதயகுமார், சேட்டு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

டிரைவர் மீது வழக்கு

இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சுகாஸ் ஹரி மீது க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்