நிலத்தரகர்கள் 2 பேர் கைது

சங்ககிரி அருகே ரூ.55 லட்சத்துக்கு கிரையம் செய்த நிலப்பத்திரத்தை கொடுக்காமல் வியாபாரியிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய நிலத்தரகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-21 20:01 GMT

சங்ககிரி அருகே ரூ.55 லட்சத்துக்கு கிரையம் செய்த நிலப்பத்திரத்தை கொடுக்காமல் வியாபாரியிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய நிலத்தரகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வியாபாரி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கன்னந்தேரி கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65). இவர் சாயப்பட்டறைகளுக்கு கலர் சாயம் விற்பனை செய்து வந்தார். இவர் தனது மைத்துனர் அய்யனார் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோருடன் சேர்ந்து நிலம் வாங்க முடிவு செய்தார்.

அப்போது வேறு நபர்கள் மூலம் நிலத்தரகர்களான மகுடஞ்சாவடி அருகே உள்ள பழைய சந்தைபேட்டையை சேர்ந்த கோபாலகண்ணன் (53) மற்றும் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (49) ஆகியோர் அறிமுகமாகினர்.

இதையடுத்து நிலத்தரகர்கள் இருவரும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சங்ககிரி மெயின் ரோட்டில் உள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான 1.47 ஏக்கர் நிலத்தை ரூ.55 லட்சத்துக்கு முத்துசாமி தரப்பினருக்கு கிரையம் செய்தனர். இதற்கான கிரையம் மகுடஞ்சாவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. ஆனால் கிரைய பத்திரத்தை முத்துசாமி தரப்பினருக்கு கொடுக்காமல் கோபாலகண்ணன், சரவணன் வைத்து கொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

இதனிடையே பத்திரத்தில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி ரூ.75 ஆயிரத்தை முத்துசாமியிடம் அவர்கள் பெற்று கொண்டனர். இதையடுத்து முத்துசாமி அவர்களிடம் நிலத்துக்கான கிரைய பத்திரத்தை கேட்டார். அப்போது கிரைய பத்திரம் வேண்டும் என்றால் ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் என நிலத்தரகர்கள் அவரை மிரட்டினர்.

இதுபற்றி முத்துசாமி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரை சந்தித்து புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரை செல்வி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

நிலத்தரகர்கள் 2 பேர் கைது

விசாரணை முடிவில், ரூ.55 லட்சத்துக்கு வாங்கப்பட்ட நிலத்தின் கிரைய பத்திரத்தை கொடுக்காமல் முத்துசாமியிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய நிலத்தரகர்கள் கோபாலகண்ணன், சரவணன் ஆகியோர் மீது மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கோபாலகண்ணன், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்