பதுக்கிய ரூ.2 லட்சம் பாலித்தீன் பைகள் பறிமுதல்
வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்டு லாரி செட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாலித்தீன் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிவகாசி,
வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்டு லாரி செட்டில் பதுக்கிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாலித்தீன் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
எச்சரிக்கை
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்பனை செய்ய கூடாது என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் சந்தேகத்தின் பேரில் சில கடைகளில் சோதனை செய்தனர். அப்போது பாலித்தீன் பைகள் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் நகரப்பகுதியில் அதன் பயன்பாடு குறையவில்லை.
அதிகாரிகள் ஆய்வு
இதனால் சந்தேகம் அடைந்த மாநகராட்சி கமிஷனர் சங்கரன், பாலித்தீன் பைகள் எங்கிருந்து வினியோகம் ஆகிறது என்று விசாரித்தார். அப்போது வெளியூர்களில் இருந்து பாலித்தீன் பைகள் கொண்டுவரப்பட்டு சிவகாசியில் உள்ள ஒரு சில லாரி செட்களில் பதுக்கி வைத்து அங்கிருந்து வியாபாரிகளுக்கு சில்லரை விற்பனை செய்தது தெரியவந்தது.இதை தொடர்ந்து அந்த லாரி செட்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இந்தநிலையில் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சித்திக், பாண்டியராஜன், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் லாரி செட்களில் திடீர் சோதனை செய்தனர்.
பறிமுதல்
இதில் பழைய விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாலித்தீன் பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் இன்னும் சில லாரி செட்களில் பாலித்தீன் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த லாரி செட்களிலும் இன்று (திங்கட்கிழமை) சோதனை செய்யப்படலாம் என தெரிகிறது. மாநகராட்சி கமிஷனர் சங்கரனின் நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.