டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பலி
கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பச்சமுத்து (வயது 62) விவசாயி, சதீஷ் (32) டிரைவர். இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் இருவரும் வேடநத்தம் கிராமத்தில் இருந்து கீழ்பென்னாத்தூருக்கு வந்தனர். பின்னர் இருவரும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வேடநத்தம் கிராமத்திற்கு திரும்பினர்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த குண்ணங்குப்பம்- தேப்பனந்தல்குளம் அருகில் உள்ள வளைவில் சென்ற போது திடீரென கரும்புலோடு ஏற்றிவந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பச்சமுத்து, சதீஷ் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பக்கத்து பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.