மின்னல் தாக்கி 2 பேர் பலி

திருச்சுழி அருகே மின்னல் தாக்கி 2 பேர் பலியாகினர்.

Update: 2023-05-21 19:31 GMT

காரியாபட்டி, 

திருச்சுழி அருகே மின்னல் தாக்கி 2 பேர் பலியாகினர்.

ஆடு மேய்க்கும் தொழிலாளி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே புல்லநாயக்கன்பட்டியை சேர்ந்த பெரியகிருஷ்ணன் மகன் பெருமாள்(வயது 28). அதே பகுதியை சேர்ந்த சின்ன கிருஷ்ணன் மகன் விஜய் (27). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். இவர்கள் ஆடு மேய்த்து வந்தனர். இந்தநிலையில் வழக்கம் போல் அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்றனர். அப்போது இவர்கள் புல்லநாயக்கன்பட்டியில் உள்ள காட்டு பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலத்த மின்னலுடன் மழை பெய்தது.

2 பேர் பலி

இதையடுத்து இரவில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு திரும்ப வந்து விட்டன. ஆனால் மேய்க்க சென்ற அவர்கள் 2 பேரும் திரும்பவரவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் காட்டு பகுதிக்கு சென்று தேடினர். இரவு நேரம் ஆகி விட்டதால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திரும்ப வந்து விட்டனர்.

பின்னர் நேற்று காலை மீண்டும் அவர்களை தேடி சென்றனர். அப்போது ராணி சேதுபுரம் காட்டுப்பகுதியில் பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் பரளச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மின்னல் தாக்கியது

பரளச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் 2 பேரின் உடல்களை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர்கள் 2 பேரும் மின்னல் தாக்கி இறந்ததும், 2 பேருக்கும் இன்னும் திருமணம் ஆக வில்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு மேய்க்க சென்ற 2 பேர் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்