விபத்தில் சிக்கி 2 பேர் பலி
வெவ்வேறு சம்பவங்களில் விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
கோவை,
கோவை கீரணத்தத்தை சேர்ந்தவர் பாஷா (வயது 28). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அதில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று கோவை போத்தனூர்-செட்டிப்பாளையம் சாலையில் நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் பலியானவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.