கார் மீது தனியார் நிறுவன பஸ் மோதி 2 பேர் பலி

நெமிலி அருகே கார்மீது, தனியார்நிறுவன பஸ் மோதியதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் பலியானார்கள். 14 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-07-28 18:46 GMT

கார்மீது பஸ் மோதி 2 பேர் பலி

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை அடுத்த நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 6 பேர் காஞ்சீபுரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சேந்தமங்கலத்தில் காஞ்சீபுரம்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த தனியார் நிறுவன பஸ் கார் மீது மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த நிஜாமாபாத்தை சேர்ந்த வெங்கடரெட்டி (வயது 55), அவிநாஷ் (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் காரில் பயணித்த பத்ரிநாத் (22), நரசிங் (42), ரமேஷ் (40), கங்காதர் ஆகிய 4 பேரும், பஸ்சில் வந்த 10 ஊழியர்களும் காயமடைந்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 4 பேரையும், தனியார் நிறுவன பஸ்சில் காயமடைந்த 10 ஊழியர்களையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.பின்னர் வெங்கடரெட்டி, அவிநாஷ் ஆகிய இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்