1,300 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2½ கிலோ மீன்
சங்கராபுரம் அருகே 1,300 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2½ கிலோ மீனை ஊராட்சி நிர்வாகம் வழங்கியது.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே நெடுமானூரில் உள்ள பெரிய ஏரியில் ஊராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இந்த மீன்கள் வளர்ந்து பெரியதாகி விட்டன. இதையடுத்து மீன்களை பிடித்து கிராம மக்களுக்கு வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று ஏரியில் மீன்கள் பிடிக்கப்பட்டன. பின்னர் தலா 2½ கிலோ வீதம் மீன்கள், பொட்டலமாக போடப்பட்டது. இதனை தொடர்ந்து 1300 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2½ கிலோ மீன்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதனை கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்று, வீட்டில் மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம்நாகராஜ், துணை தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணியன், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.