2 வீடுகளில் நகை- பணம் திருட்டு

விழுப்புரம், செஞ்சி அருகே 2 வீடுகளில் நகை- பணம் திருடு போனது.

Update: 2022-06-09 17:24 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் மகன் ரமேஷ் (வயது 23). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையொட்டி திருமண விருந்திற்காக தனது மனைவியுடன் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை ரமேஷ், தனது வீட்டிற்கு வந்தார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.75 ஆயிரமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

செஞ்சி அருகே உள்ள வல்லத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 43). ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 2 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்