வாலிபரை கொன்று புதைத்த வழக்கில் நண்பர்கள் 2 பேர் கைது
வாலிபரை கொன்று புதைத்த வழக்கில் நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
துறையூர்:
நண்பர்கள் கைது
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பச்சமலை கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட தாலூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக நேற்று முன்தினம் துறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்தவர் துறையூர் பெருமாள்மலை அடிவாரம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 25) என்பதும், அவரது நண்பர்களே அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வினோத் (38) மற்றும் நந்தகுமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர்.
கட்டையால் தாக்கினர்
இதில் அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், கடந்த மாதம் 18-ந் தேதி கீரம்பூர் காலனி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் காணாமல் போய்விட்டார். இது குறித்து அவரது தாய் ராசாத்தி அளித்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்்த மாதம் 20-ந் தேதி கார்த்திக் காணாமல் போனது தொடர்பாக அவரது நண்பரான விஜய்யிடம், வினோத் மற்றும் கார்த்திக்கின் அண்ணன் நந்தகுமார் ஆகியோர் விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் கார்த்திக் பற்றி கூற மறுத்ததால், அவரை பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள கிரிவல பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜய்யை, வினோத் மற்றும் நந்தகுமார் சேர்ந்து கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக இறந்தார்.
தோட்டத்தில் புதைப்பு
இதையடுத்து அவரது உடலை புதைக்க 2 பேரும் முடிவு செய்தனர். இதனால் அவரது உடலை, தங்களது இருசக்கர வாகனத்தில் வைத்து, வழியில் உள்ள சோதனைச்சாவடியை கடந்து பச்சைமலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு தாலூர் கிராமத்தில் உள்ள ஜெயராமன் என்பவரது முந்திரி தோட்டத்தில் விஜய்யின் உடலை புதைத்துள்ளனர். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் கிராமத்திற்கு வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.