ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஏரி பகுதியில் உழவு செய்த 2 பேர் மீது வழக்கு
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஏரி பகுதியில் உழவு செய்த 2 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
பூதலூர் அருகே உள்ள மாரநேரி கிராமத்தில் அய்யனார் ஏரியில் ஐகோர்ட்டு உத்தரவின் படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில் மாரநேரி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் நடராஜன் (வயது43), காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (30) ஆகிய 2 பேரும் உழவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பூதலூர் கல்லணை கால்வாய் பிரிவு உதவி பொறியாளர் சூரிய பிரகாஷ் பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.