நாய்கள் கடித்துக்குதறியதில் 2 மான்கள் பலி
நாய்கள் கடித்துக்குதறியதில் 2 மான்கள் பலியாகின.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் உணவு தேடி வந்த மானை நாய்கள் விரட்டின. பாண்டியன்குளம் கண்மாய் பகுதியில் நாய்கள் சுற்றி வளைத்து மானை கடித்துக்குதறின. இதில் காயம் அடைந்த மான் சிறிது நேரத்தில் இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி வனச்சரக அலுவலர் பூவேந்தன், வனக்காப்பாளர் பழனிகுமார், இறந்த மானை கண்மாயில் புதைத்தனர்.
பாண்டியன் குளம் கண்மாய் பகுதியில் ஏராளமான மான்கள் சுற்றிதிரிகின்றன. அவற்றை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல சாத்தூர் அருகே உள்ள சிந்துவம்பட்டியில் இரை தேடி வந்த மானை நாய்கள் கடித்தன. அப்பகுதி மக்கள் மானை காப்பாற்றி அதே பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தின் உள்ளே அடைத்து வைத்தனர். இதுகுறித்து இருக்கன்குடி போலீசாருக்கும், சிவகாசி வனத்துறையினருக்கும் மற்றும் உப்பத்தூர் கால்நடை மருத்துவமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் அரவிந்தன், மானை பரிசோதித்த போது இறந்துவிட்டதாக தெரிவித்தார். சிவகாசி வன உயிரினச்சரக அலுவலர் பூவேந்தன், இருக்கன்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து அந்த மான் ஆற்றுப்படுகையில் புதைக்கப்பட்டது.