ரூ.2¼ கோடியில் 40 பேருக்கு நலத்திட்ட உதவி
சுதந்திர தினத்தையொட்டி நாகர்கோவிலில் கலெக்டர் ஸ்ரீதர் தேசியக்கொடி ஏற்றினார். விழாவில் ரூ.2 கோடியே 30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகர்கோவில்:
சுதந்திர தினத்தையொட்டி நாகர்கோவிலில் கலெக்டர் ஸ்ரீதர் தேசியக்கொடி ஏற்றினார். விழாவில் ரூ.2 கோடியே 30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சுதந்திர தினவிழா
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று காலை நடந்தது.
கலெக்டர் ஸ்ரீதர் சரியாக 9.05 மணிக்கு விளையாட்டு அரங்க மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது விழாவில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தும் உடன் சென்றார். அதைத்தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெண் புறாக்கள் மற்றும் தேசியக் கொடியின் மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் நடந்த ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஸ்ரீதர் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 26 ஆயிரத்து 500 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.96 ஆயிரத்து 790 மதிப்பிலும், வருவாய்த்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 200 மதிப்பிலும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.370 மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க அலகு சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 30 லட்சத்து 45 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
87 போலீசாருக்கு பதக்கம்
சிறப்பாக பணிபுரிந்த 87 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதேபோல அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய 243 பணியாளர்களுக்கு நற்சான்றிதழை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
இந்த ஆண்டில் மாவட்டத்தில் சிறந்த விவசாயி விருதை துவரங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி செண்பக சேகரப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது. மேலும் குமரி மாவட்ட வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் சாதித்த விளையாட்டு வீரர்களும் ஊக்கப்படுத்தப்பட்டனர். சுதந்திர தின விழாவில் 6 பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தேசபக்தி பாடல்களுக்கும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல்களுக்கும் வித,விதமான உடையில் மாணவர்கள் நடனம் ஆடி பார்வையாளர்கள் அனைவரையும் அசத்தினர்.
விஜய் வசந்த் எம்.பி.
விழாவில் விஜய் வசந்த் எம்.பி, மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மாநகர மேயர் மகேஷ், மாநகர ஆணையர் ஆனந்த் மோகன், உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சுப்பிரமணிய கல்கர், துணை சூப்பிரண்டுகள் நவீன்குமார் (நாகர்கோவில்), மகேஷ்குமார் (கன்னியாகுமரி), ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ், சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அலுவலர் ஜோசப் சென், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.