186 பயனாளிகளுக்கு ரூ.2¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்

வேலூரில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 186 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் வழங்கினர்.

Update: 2023-05-30 18:41 GMT

ஜமாபந்தி

வேலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி கடந்த 24-ந் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. ஜமாபந்திக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சத்துவாச்சாரி, பென்னாத்தூர், கணியம்பாடி, தென், வடவேலூர் ஆகிய உள்வட்டத்துக்கு உட்பட்ட 51 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல், அரசு நலதிட்டங்களின் கீழ் நிதியுதவி, கிராம வளர்ச்சிக்கான திட்டப்பணிகள், குடிநீர், சாலை வசதி மற்றும் இதர தேவைகள் தொடர்பாக 302 மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களின் மீது உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. கலெக்டரும், வருவாய் தீர்வாய அலுவலருமான குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, மேயர் சுஜாதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் செந்தில் வரவேற்றார்.

ரூ.2¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்

இதில் 139 பயணிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள், 30 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு சலவை பெட்டிகள், 4 பயனாளிகளுக்கு விவசாய இடுபொருட்களும், 2 பயனாளிகளுக்கு தோட்டக்கலை துறையின் சார்பில் தொகுப்புகள், 3 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 15 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் என்று மொத்தம் 186 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 89 லட்சத்து 53 ஆயிரத்து 485 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் வழங்கி பேசினார்கள்.

விழாவில் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமசந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சத்தியமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் பூமா, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்