ரூ.2¼ கோடி போதைப்பொருள் பறிமுதல்
கோவைக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2¼ கோடி போதைப்பொருளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவைக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2¼ கோடி போதைப்பொருளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதை பொருள் பறிமுதல்
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் அந்த ரெயில் கோவை-திருப்பூர் இடையே வந்து கொண்டிருந்த போது ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர்.
இதில் எஸ் 10 பெட்டியின் 71-வது இருக்கையின் கீழ் சில பிளாஸ டிக் கவர்கள் காணப்பட்டன. அதை எடுத்து போலீசார் சோத னை செய்த போது ஹேசிஸ் ஆயில் என்ற போதைப் பொருள் இருந்தது. மொத்தம் 2 கிலோ 200 கிராம் போதைப் பொருள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 கோடியே 20 லட்சம் ஆகும்.
விசாரணை
இது குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:-
பாட்னா- எர்ணாகுளம் ரெயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2¼ கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதை பீகாரில் இருந்த கடத்தி வந்தார்களா? அல்லது பிற மாநில ரெயில் நிலையத்தில் நின்ற போது கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்த போதைப்பொருளை கடத்தி வந்தது யார்?, எங்கு கடத்தி செல்லப்படுகிறது என்று விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் எஸ் 10 பெட்டியில் பயணித்தவர்கள் மற்றும் அந்த பெட்டியில் ஏறி இறங்கிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்..
கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்தி வந்த வெளிநாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர். தற்போது மீண்டும் போதைப்பொருள் பிடிபட்டு உள்ளது.
எனவே கோவை வழியாக செல்லும் ரெயில்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.