பள்ளத்தில் கார் கவிழ்ந்து சென்னை சிறுமிகள் 2 பேர் பலி

ராணிப்பேட்டை பெல் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் சென்னை சிறுமிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-05-15 19:04 GMT

துக்க நிகழ்ச்சிக்கு...

சென்னையை சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 48), அஜிமுன் நிஷா (40), முகம்மது சலீம் (49), தமசுல் பாத்திமா (15), ஷாப்பியா (9), வர்ஷானா (21), சுமையா பாத்திமா (15) ஆகிய 7 பேரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர். காரை சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் (32) என்பவர் ஓட்டி வந்தார்.

பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலை சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

பள்ளத்தில் கவிழ்ந்தது

ராணிப்பேட்டை பெல் அருகே வரும்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரத்தின் அருகே இருந்த சுமார் 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரில் பயணம் செய்த சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமசுல் பாத்திமா, சென்னை கோட்டூர் பகுதியை சேர்ந்த சுமையா பாத்திமா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் காரில் பயணம் செய்த டிரைவர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த 2 பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்