பெண்ணை மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது
வடவள்ளியில் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடவள்ளி
வடவள்ளியில் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகை, பணம் கொள்ளை
கோவை வடவள்ளியை அடுத்த மருதம் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது45). இவரது மனைவி மகேஸ்வரி. பெரியசாமி பூமார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை பெரியசாமி வீட்டில் இருந்து கடைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் மகேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த 2 மர்மநபர்கள் மகேஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டி, வீட்டில் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் கொடுக்க ப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
வாகன சோதனை
வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை போலீசார் வீரகேரளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த முத்துசுருளி (35), வடவள்ளியை சேர்ந்த அரவிந்த் (23) என்பதும், இவர்கள் தான் மகேஸ்வரியை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
2 பேர் கைது
தொடர் விசாரணையில், பெரியசாமி வீட்டில் கார் வைத்துள்ளார். எங்காவது குடும்பத்துடன் வெளியில் சென்றால் கார் ஓட்டுவதற்கு இவர்கள் 2 பேரையும் டிரைவராக அழைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அரவிந்துக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. அப்போது முத்துசுருளி, பெரியசாமி வீட்டில் பணம், நகை உள்ளது. அதனை நாம் கொள்ளையடித்து விடலாம் என திட்டம் போட்டு கொடுத்துள்ளார். அதன்படி 2 பேரும் நகை, பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 17¼ கால் பவுன் நகை, ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் பணம் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த ஒரே நாளில் தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.