ரேஷன் கடை ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
நெல்லை அருகே ரேஷன் கடை ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேட்டை:
நெல்லையை அடுத்த பேட்டை எம்.என்.பி. சன்னதி 2-வது தெற்கு தெருவை சேர்ந்தவர் பீர் முகமது மகன் மைதீன் (வயது 47). இவர் அங்குள்ள ரகுமான் பேட்டை ரேஷன் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பேட்டை மயிலப்புரத்தைச் சேர்ந்த இசக்கி மகன் முருகன் (40), மருதப்பன் மகன் வினோத்குமார் (30) ஆகிய 2 பேரும் ரகுமான்பேட்டை ரேஷன் கடைக்கு சென்று மைதீனிடம் மாமுல் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் வழக்குப்பதிவு செய்து முருகன், வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.