மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது

குடியாத்தத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-07 19:17 GMT

வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், முத்துக்குமரன் உள்ளிட்ட போலீசார் நேற்று குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த குடியாத்தம் மேல்பட்டிரோட்டை சேர்ந்த நாகு என்ற நாகராஜன் (வயது 30) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் சிறுசிறு பொட்டலங்களாக ஏராளமாக கஞ்சா இருந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் நாகராஜனை கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

நாகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்ற வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாகராஜன் அளித்த தகவலின் பேரில் போலீசார் கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பதற்காக இருந்த வாணியம்பாடி பெருமாள்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் என்ற கரிபிரசாத் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கரிபிரசாத் சில நாட்களுக்கு முன்புதான் திருட்டு வழக்கில் சிறையில் இருந்து விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் காலவபல்லி கிராமத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக விற்பது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்