டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
நாகப்பட்டினம் கோபுராஜபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் உத்திராபதி (வயது50). டேங்கர் லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் வழியாக நாகப்பட்டினம் நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார். அப்போது நீடாமங்கலம் கடைவீதி திருப்பம் எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை ஓரமாக செல்லுங்கள் என உத்திராபதி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வலங்கைமான் வட்டம் பயத்தஞ்சேரி கிராமத்தைச்சேர்ந்த பிரகாஷ் (35), வலங்கைமான் வட்டம் கொட்டையூர் நடுத்தெருவை சேர்ந்த மணிமாறன் (25) ஆகியோர் லாரியை விரட்டிச்சென்றனர். பின்னர் நீடாமங்கலம் ெரயில்வேகேட் பகுதியில் நின்ற உத்திராபதியை தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் உத்திராபதி புகார் கொடுத்தார். அதன் பேரில் நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், மணிமாறன் ஆகிய 2பேரையும் நேற்று கைது செய்தனர்.