பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
கயத்தாறு அருகே பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறில் இருந்து தேவர்குளத்துக்கு நேற்று முன்தினம் மாலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. டிரைவர் சுப்பிரமணியன் பஸ்சை ஓட்டிச் சென்றார். அப்போது கயத்தாறில் இருந்து அய்யனார்ஊத்து கிராமத்திற்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 3 வாலிபர்கள் சென்றனர். அவர்களது மோட்டார் சைக்கிள்களுக்கு வழிவிடவில்லை எனக்கூறி பஸ் டிரைவரிடம் தகராறு செய்தனர். பின்னர் ஆத்திரத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகளை உடைத்தனர். இதுபற்றி கயத்தாறு போலீசில் டிரைவர் சுப்பிரமணியன் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி பனிக்கர்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், தெற்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.