லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது
தூத்துக்குடியில் லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாரி டிரைவர்
தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். லாரி டிரைவர். இவர் தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு எடைநிலையம் அருகே சர்வீஸ் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் கோயில்பிள்ளைநகர் பண்டுகரையை சேர்ந்த சேகர் மகன் சதீஷ் (வயது 20), கேம்ப்-1 பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் அஜித் (22) ஆகிய 2 பேரும் வந்தனர்.
செல்போன் பறிப்பு
அவர்கள் திடீரென சண்முகசுந்தரத்தை கல்லால் தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போன், ரூ.650, ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சண்முகசுந்தரம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், தனிப்பிரிவு ஏட்டு கலைவாணர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சதீஷ், அஜித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.