வேளாண் எந்திரத்துக்கு தீ வைத்த 2 பேர் கைது
ஜேடர்பாளையம் அருகே வேளாண் எந்திரத்துக்கு தீ வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கந்தம்பாளையம்
ஜேடர்பாளையம் அருகே உள்ள கரைப்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 52). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மா, தென்னை, நெல்லி, எலுமிச்சை மற்றும் கரும்பு ஆகியவற்றை வளர்த்து வருகிறார். இவற்றுக்கு தண்ணீர் பாய்ச்ச அங்கு குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தோட்டத்தில் நிலத்தை உழ பயன்படும் சிறிய வகை எந்திரமான பவர் டில்லரையும் அங்கு நிறுத்தி வைத்திருந்தார். நேற்றுமுன்தினம் குழந்தைவேல் வழக்கம்போல் தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு பவர் டில்லர் எந்திரம் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சேதமாகி கிடந்தது. மேலும் குடிநீர் குழாய்களும், வால்வுகளும் அடித்து உடைக்கப்பட்டு கிடந்தன. அதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் பவர் டில்லரை தீ வைத்து எரித்ததும், குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நல்லூர் போலீசார் ஜேடர்பாளையம் மாரியம்மன் படுகை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (53), அரியலூர் ஆண்டிமடம் கரிய பெருமாள் மகன் தமிழரசன் (37) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.