பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்திய 381 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்திய 381 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது
மத்திகிரி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்லப்படுவதை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பேரில் மத்திகிரி போலீசார் பூனப்பள்ளி அடுத்த கப்பக்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் காரில் உள்ள இருக்கைகளை கழற்றி பார்த்தபோது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்ததும், இவை சேலத்துக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து காரில் 55 மூட்டைகளில் இருந்து 381 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் ஆகும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் காரில் குட்கா கடத்தியதாக கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் எம்மனஅள்ளி கிராமத்தை சேர்ந்த நிஷாந்த் (வயது 22) மற்றும் ஒன்னனஅள்ளி கிராமத்தை சேர்ந்த அப்பு கவுடா (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.