2 பேர் கைது

கூட்டுறவு சங்கத்திற்கு தீ வைத்த வழக்கில் தலைவர் உள்பட 2 பேர் கைது

Update: 2022-08-30 21:50 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் அரசு ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். இதில் ஆவணங்கள் பல தீயில் கருகி நாசமாகின. இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் அறைக்கு தீ வைத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

விசாரணையில், அவர் பாளையங்கோட்டை தெற்கு பஜாரை சேர்ந்த தினேஷ் (வயது 29) என்பதும், அவர் கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் கிளர்க் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக நெல்லை வண்ணார்பேட்டை கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தலைவர் பிரபாகரன் (52) என்பவரையும் கைது செய்தனர். இவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு இலந்தைகுளத்தை சேர்ந்தவர் ஆவார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் பிரபாகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்