ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது

ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது

Update: 2022-08-25 12:14 GMT

பல்லடம்

ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது என்றும், அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்லடம் எம்.எஸ். எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ, சூலூர் கந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வாழ்வாதாரம் பாதிக்கும்

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆழியாறு பி.ஏ.பி.பாசனத்திட்டத்தில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் பெரிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதால் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், அந்தப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது. தென்னை மற்றும் காய்கறி விவசாயிகள் அதிகமாக உள்ளதால் இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

எனவே பி.ஏ.பி. திட்ட தண்ணீரை வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தை, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கைவிட வேண்டும்.மேலும் பி.ஏ.பி. பாசனத்திட்டத்தில் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது என்று நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது, பல்லடம், சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி, மடத்துக்குளம், ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம்.

அரசாணையை ரத்து செய்யவேண்டும்

ஏற்கனவே பி.ஏ.பி.திட்டத்தில் காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ததால் பாசன தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தால் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

---

Tags:    

மேலும் செய்திகள்