2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஊட்டி தாலுகாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி தாலுகாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
வருவாய்த்துறையினர் அளவீடு
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்களில் கால்வாய்கள், நீரோடைகள், அணைகள் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
மேலும் ஆக்கிரமிப்பு நிலங்களில் அளவீடு செய்யப்பட்டு, அங்கு விவசாயம் ஏதேனும் செய்திருந்தால் அப்புறப் படுத்தப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட நஞ்சநாடு-2 மற்றும் குருத்துக்குளி பகுதியில் ஓடை புறம்போக்கு நிலம் என்ற வகைப்பாட்டில் உள்ள நிலத்தில் 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
2 ஏக்கர் மீட்பு
இதுதொடர்பாக ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாய பணிகள் எதுவும் மேற்கொள்ள கூடாது, அதில் இருந்து வெளியேறுமாறு வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் வெளியேறவில்லை. இதைதொடர்ந்து ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் இளங்கோகிலகுரு, கிராம நிர்வாக அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வருவாய்த்துைறயினர் அந்த இடத்துக்கு சென்று நிலத்தை ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தில் கேரட் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டது தொியவந்தது.
தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு, நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. இதில் அத்துமீறி யாரும் நுழைய கூடாது, மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்க கூடாது, தற்போது மீட்கப்பட்ட இடம் 5 ஆண்டுகளாக 2 உரிமையாளர்களிடம் ஆக்கிரமிப்பில் இருந்தது என்றனர்.