2 கோவில்களில் குடமுழுக்கு

திருமருகல், வேதாரண்யம் பகுதியில் உள்ள 2 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-26 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல், வேதாரண்யம் பகுதியில் உள்ள 2 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரதராஜபெருமாள் கோவில்

திருமருகல் ஒன்றியம் இடையாத்தன்குடியில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று குடமுழுக்கு நடந்தது. விழாவை முன்னிட்டு அனுக்ஞை, ஆச்சார்யாதி ருத்விக்வர்ணம் பகவத் பிரார்த்தனை, மிருதசங்கரஹணம், அங்குரார்பணம் மற்றும் வாஸ்து ஹோமம் நடந்தது. தொடர்ந்து புண்யாகவாசனம், அக்னி பிரதிஷ்டை, முதல் கால பூர்ணாஹுதி நடைபெற்றது. அதையடுத்து விமானம், மூலமூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும்,இரண்டாம் கால பூர்ணாஹுதியும் நடந்தது.

நேற்று காலை கோபூஜை, விஸ்வரூபம், சதுஷ்டான ஆராதனம், சாந்தி ஹோமமும், கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.15 மணிக்கு விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை நாகப்பட்டினம் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் ராணி, ஆய்வாளர் பக்கிரிசாமி, செயல் அலுவலர் முருகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு பெருமாள் வீதிஉலா புறப்பாடு நடைபெற்றது.

வேதாரண்யம்

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் குட்டியாண்டவர், பாளையத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக அதற்கான திருப்பணிகள் நடந்து வந்தது. பணிகள் முடிந்த நிலையில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக சாலை பூஜை, 2-ம் கால யாக சாலை பூஜை மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று 4-ம் கால யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும், யாத்ரதானம் நடந்தது. பின்னர் கடங்கள் புறப்பாடு நடைபெற்று விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பஞ்சாயத்தார்கள், உறுப்பினர்கள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்