கள்ளக்குறிச்சியில் 19-ந்தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி: விழா மேடை அமைக்கும் பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் 19-ந்தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி விழா மேடை அமைக்கும் பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-14 18:45 GMT

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கைகாட்டி அருகில் வருகிற 19-ந்தேதி(புதன்கிழமை) நடைபெற உள்ளது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதையொட்டி அங்கு தற்போது விழா மேடை அமைக்கும் பணி மற்றும் பயனாளிகள் அமர்வதற்கான பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம், வாகனங்கள் வந்து செல்வதற்கான பணிகள், தற்காலிக குடிநீர், கழிவறை அமைத்தல் போன்ற அத்தியாவசிய பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டா் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் மாலா, தாசில்தார் சத்தியநாராயணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.என்.டி. முருகன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் பி.கே.முரளி மற்றும் அரசு அலுவலர்கள், போலீசார் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்