ரூ.6½ கோடியில் 19 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள்

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஊராட்சிகளில் ரூ.6.65 கோடியில் துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.காந்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

Update: 2023-04-27 20:29 GMT

19 துணை சுகாதார நிலையங்கள்

வாலாஜா ஊராட்சி ஒன்றியம், குடிமல்லூர் ஊராட்சியில் உள்ள ஏ.டி.சி. பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசு நிதி ரூ.4.40 கோடி மற்றும் சன் டி.வி. நெட் ஒர்க் நிறுவன நிதி ரூ.2.21 கோடி என மொத்தம் ரூ.6.65 கோடி மதிப்பீட்டில் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 19 கிராம ஊராட்சிகளில் புதியதாக கட்டப்படவுள்ள 19 துணை சுகாதார நிலையக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் சுகாதார நிலைய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

அமைச்சர் ஆர்.காந்தி

விழாவில் அமைச்சர் காந்தி பேசுகையில் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் 19 சுகாதார நிலையங்கள் நமக்கு நாமே திட்டம் மற்றும் சி.எஸ்.ஆர் நிதியுதவியுடன் கட்டப்படவுள்ளது என்றார். இது போன்று மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் சி.எஸ்.ஆர்.நிதி வழங்கிய சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனத்திற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

அரசு நிதியில் மட்டும் முடியாது

தமிழ்நாட்டில் 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது. இதில் சில நிலையங்கள் வாடகை கட்டிடத்திலும், பயன்படுத்துவதற்கு தகுதியற்ற நிலையிலும், சிதிலமடைந்த நிலையிலும் உள்ளது. இக்கட்டிடங்களை அரசு நிதியில் மட்டுமே கட்டித்தர முடியாது. சி.எஸ்.ஆர். நிதி தருவதற்கு தயாராக இருக்கும் தனியார் நிறுவனங்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோரிடமிருந்து நிதியினை பெற்றும் இதுபோன்ற கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்களில் ரூ.82.75 லட்சம் மதிப்பீட்டில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். நடப்பாண்டு மானியக் கோரிக்கையில் ரூ.36.35 கோடி மதிப்பீட்டில் அறிவிப்புகளின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 26 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு மருத்துவ கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

புதிய கட்டிடங்கள்

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம், பனப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.80.88 லட்சம் செலவில் வட்டார பொது சுகாதார அலகு, லாலாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.80.88 லட்சம் செலவில் வட்டார பொது சுகாதார அலகு, திமிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.80.88 லட்சம் செலவில் வட்டார பொது சுகாதார அலகு, மேல்களத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.2 கோடி செலவில் கூடுதல் கட்டிடம், கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.2 கோடி செலவில் கூடுதல் கட்டிடம், அரக்கோணம் ஆரம்ப நகர்புற சுகாதார நிலையத்தில் ரூ.1.2 கோடி செலவில் புதியக் கட்டிடம் கட்டப்படவுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகத்தினையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 20 பயனாளிகளுக்கு மருந்து பெட்டக தொகுப்பினையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனத்தினையும் அமைச்சர்கள் வழங்கினார்கள்,

நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் சேஷா வெங்கட், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் விஜயா முரளி, துணை இயக்குனர் மணிமாறன், செயற்பொறியாளர் சொக்கலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், கடப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், மற்றும் மாலதி கணேசன், செல்வம் உள்ளிட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், நகரமன்றத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மற்றும் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்