அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு திடீர் வாந்தி-வயிற்று வலி
கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு திடீரென்று வாந்தி, வயிற்று வலி உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி: கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு திடீரென்று வாந்தி, வயிற்று வலி உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதிய உணவு சாப்பிட்டனர்
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 433 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 260 மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களில் 19 பேருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. மேலும் வயிற்றுப்போக்கு, வாந்தி உண்டானதால் கடும் அவதிப்பட்டனர்.
இதையறிந்த ஆசிரியர்கள், மாணவர்களை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதனை செய்து குளுக்கோஸ் ஏற்றினார்கள். இதை அறிந்த பெற்றோர்கள் பதறி அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். இதற்கிடையில் சத்துணவு சாப்பிட்டு நன்றாக இருந்த மாணவர்களையும் பெற்றோர் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உணவு பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன், இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் ஆனைமலை ஒன்றிய அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளும் ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கல்வி மாவட்ட அதிகாரி முருகேசன் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மாணவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:- கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 433 மாணவர்களில் 260 பேருக்கு நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது. சாப்பாட்டுடன் வழங்கப்பட்ட பருப்பு குழம்பில் உருளை கிழங்கு, சோயா, தக்காளி, முருங்கை கீரை ஆகியவை சேர்க்கப்பட்டு உள்ளது. மேலும் முட்டையும் வழங்கப்பட்டு உள்ளது. முட்டையுடன், கீரை சேர்த்து கொடுத்ததால் 19 பேருக்கு ஒத்துக்கவில்லை. இதனால் மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. தற்போது 15 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்று விட்டனர். 4 பேருக்கு மட்டும் குளுக்கோஸ் ஏற்றப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாணவர்கள் சாப்பிட்ட உணவு, முட்டை, குழம்பு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.