பீரோவை தூக்கி சென்று 19 பவுன் தங்க நகைகள் கொள்ளை

இலுப்பூர் அருகே இரும்பு வியாபாரி வீட்டின் கதவை உடைத்து பீரோவை தூக்கி சென்று 19 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-07-03 18:46 GMT

இரும்பு வியாபாரி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மலைக்குடிபட்டியை சேர்ந்தவர் தர்மர் (வயது 59). இரும்பு வியாபாரி. இவரது மகன்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மகன்களை பார்ப்பதற்காக தர்மர் குடும்பத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரு சென்றார். பின்னர் அங்கிருந்து மலைக்குடிபட்டிக்கு நேற்று முன்தினம் திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தர்மர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

19 பவுன் நகைகள் கொள்ளை

அப்போது வீட்டில் இருந்த பீரோவை காணவில்லை. பின்னர் அருகில் உள்ள இடங்களில் பீரோவை தேடி பார்த்துள்ளனர். வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள காட்டில் திருட்டு போன பீேரா கிடந்தது. இதையடுத்து பீரோவை பார்த்த போது, பீரோவை உடைத்து அதில் இருந்த 19 பவுன் தங்க நகைகள் மற்றும் அதில் இருந்த பொருட்களையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தர்மர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து 19 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்