கருணாநிதி நூற்றாண்டு மருத்துவ முகாம் மூலம் 1.88 லட்சம் பேர் பயன் -அமைச்சர் தகவல்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் 103 இடங்களில் நடைபெற்ற மெகா சிறப்பு மருத்துவ முகாம் மூலம் 1.88 லட்சம் பேர் பயன் அடைந்தனர்.
சென்னை,
கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் கடந்த 24-ந்தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 885 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டுள்ளனர்.
இந்த மருத்துவ முகாமில் 35 ஆயிரத்து 138 பேர் சித்தா மற்றும் இந்திய மருத்துவத்திற்காக பதிவு செய்து பரிசோதனை செய்து கொண்டனர்.
நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம்
இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பரிசோதித்து நோய் கண்டறியப்பட்டவர்கள் விவரம் வருமாறு:
* மருத்துவ முகாமில் வினியோகிக்கப்பட்ட மருந்துகளின் செலவு தொகை ரூ.42 லட்சத்து 31 ஆயிரத்து 404 ஆகும்.
* நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்காக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 48 பேர் பரிசோதித்து கொண்டனர்.
* நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று 14 ஆயிரத்து 471 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் 4 ஆயிரத்து 56 நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
* ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று 19 ஆயிரத்து 217 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் 5 ஆயிரத்து 576 ரத்த அழுத்த நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
* நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று 8 ஆயிரத்து 333 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் இந்த 2 நோய்களினாலும் 2 ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
* கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை 7 ஆயிரத்து 849 பேர் மேற்கொண்டனர். இதில் 762 பேருக்கு கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டது.
மார்பக புற்றுநோய்
* மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை 8 ஆயிரத்து 712 பேர் மேற்கொண்டனர். இதில் 1,176 பேருக்கு மார்பக புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டது.
* ரத்த சோகை கண்டறியும் பரிசோதனையை 44 ஆயிரத்து 165 பேர் செய்துகொண்டனர். இதில் 5 ஆயிரத்து 492 பேருக்கு ரத்த சோகை இருப்பது தெரிய வந்தது.
* சிறுநீரக செயல்பாட்டை கண்டறியும் பரிசோதனையை 28 ஆயிரத்து 553 பேர் செய்து கொண்டனர். இதில் 785 பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
* ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து கண்டறியும் பரிசோதனையை 28 ஆயிரத்து 658 பேர் மேற்கொண்டனர். இதில் 1,299 பேருக்கு ரத்த கொழுப்பு அதிகம் இருப்பது தெரிய வந்தது.
* 12 ஆயிரத்து 817 பேர் காசநோய் பரிசோதனை மேற்கொண்டனர். சளி பரிசோதனைக்கான 4 ஆயிரத்து 366 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 289 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
* 12 ஆயிரத்து 591 பேர் தொழுநோய் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 133 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேல் பரிசோதனையில் 14 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம்
* கொரோனா பரிசோதனை 936 பேர் செய்து கொண்டனர்.
* பல் பரிசோதனையை 13 ஆயிரத்து 685 பேர் மேற்கொண்டனர். இதில் 1,565 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
* இ.சி.ஜி. பரிசோதனையை 14 ஆயிரத்து 894 பேர் எடுத்துக் கொண்டனர். இதில் 1,238 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
* 'எக்கோ' பரிசோதனையை 7 ஆயிரத்து 20 பேர் எடுத்துக் கொண்டனர். இதில் 715 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
* முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 13 ஆயிரத்து 125 பேர் பதிவு செய்து கொண்டனர்.
* தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 852 பேர் கண் கண்ணாடி பெற்றனர்.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.