தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,843 வழக்குகள் ரூ.21 கோடியே 37 லட்சத்துக்கு தீர்வு
கரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,843 வழக்குகள் ரூ.21 கோடியே 37 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது.
ேதசிய மக்கள் நீதிமன்றம்
கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்தாண்டிற்கான முதலாவது தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதனை முதன்மை சார்பு நீதிபதி கோகுல் முருகன் தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
5 அமர்வுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 3,980 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 1,843 வழக்குகள் ரூ.21 கோடியே 36 லட்சத்து 74 ஆயிரத்து 784-க்கு தீர்வு காணப்பட்டது.
குளித்தலை
குளித்தலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதற்கு குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முககனி தலைமை தாங்கினார். மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 1,000-த்திற்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 760 வழக்குகளுக்கு ரூ.5 கோடியே 63 லட்சத்து 70 ஆயிரத்து 551-க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட குற்றவியல் நீதிபதி பாலமுருகன், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் குற்றவியல் நீதிபதிகள், வக்கீல் சங்க நிா்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.