அரசு அலுவலகத்தில் ரூ.18¾ லட்சம் மோசடி; பெண் கணக்காளருக்கு வலைவீச்சு

சங்கரன்கோவில் அரசு அலுவலகத்தில் ரூ.18¾ லட்சம் மோசடி தொடர்பாக பெண் கணக்காளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-04-21 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரசு அலுவலகத்தில் ரூ.18¾ லட்சம் மோசடி தொடர்பாக பெண் கணக்காளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

2 வங்கிகளில் கணக்கு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் யூனியன் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம். இதில் அலுவலக மேலாளராக ராதா என்பவர் பணியாற்றி வருகிறார்.

கணக்காளராக ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் பணியாற்றுகிறார்.

இந்த அலுவலகத்திற்கு சங்கரன்கோவிலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இரண்டு நிரந்தர வைப்புத்தொகை கணக்குகளும், மற்றொரு வங்கியில் நிர்வாக செலவுகளுக்காக பணம் எடுக்கும் வகையில் ஒரு கணக்கும் இருந்தது.

ரூ.18¾ லட்சம்

இந்தநிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உள்ள கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வங்கி கணக்கில் ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் கணக்கில் வராதது தெரியவந்தது.

மேலும் அனைத்து நிரந்தர வைப்புத்தொகைக்கான ஆதாரங்களையும் முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கணக்காளர் மகேஸ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸ் அனுப்பியது முதல் அவர் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

வலைவீச்சு

இந்த மோசடி குறித்து அலுவலக மேலாளர் ராதா, சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அலுவலக கணக்காளர் மகேஸ்வரியை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு அலுவலகத்தில் ரூ.18¾ லட்சம் மோசடி சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்