போதைப்பொருள் கடத்தியவர்களின் ரூ.18 கோடி சொத்துகள் பறிமுதல்- கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால்

தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தியவர்களிடம் இருந்து ரூ.18 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

Update: 2023-01-25 19:55 GMT

தமிழ்நாடு கூடுதல் டி.ஜி.பி. (அமலாக்க பணியகம்) மகேஷ்குமார் அகர்வால் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாநகர துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன் (நெல்லை), பாலாஜி சரவணன் (தூத்துக்குடி), சாம்சன் (தென்காசி), ஹரிகிரன் (கன்னியாகுமரி) ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நெல்லை சரகத்தில் புகையிலை பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை சரகம் மற்றும் மாநகரத்தில் மட்டும் கடந்த ஆண்டு போதைப்பொருள் சம்பந்தமாக 784 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,324 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 1,208 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் 579 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. நெல்லை சரகம் மற்றும் மாநகர பகுதியில் மட்டும் 119 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். போதைப்பொருட்கள் கைப்பற்றியதை பாதுகாப்பாக வைப்பதற்கு 5 இடங்கள் பயன்படுத்தப்படுகிறது.

தென்மண்டலத்தில் மட்டும் 935 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று கைப்பற்றப்பட்ட 3 ஆயிரம் கிலோ கஞ்சாவை அழிப்பதற்கு கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை போதைப்பொருள் கடத்தியவர்களிடம் இருந்து ரூ.18 கோடி மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதில் மதுரை தென்சரகத்தில் மட்டும் ரூ.16 கோடிக்கு சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக இதுவரை 150 வெளிமாநில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பள்ளிகள் அருகில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் பள்ளிகளில் போதை தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 778 குழுக்கள் அமைத்துள்ளோம். தொடர் நடவடிக்கைகளால் போதைப்பொருள் சப்ளை குறைந்துள்ளது. ரெயில்களில் போதைப்பொருள் ஏற்றி வருவதை தடுக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் போதையில்லா தமிழகம் சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்