சேலத்தில் தனியார் கல்லூரியில் மாணவ- மாணவிகள் செய்முறை தேர்வுக்கு சென்றதை நோட்டமிட்டு 18 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இந்த துணிகர திருட்டு பற்றிய விவரம் வருமாறு:-
தனியார் கல்லூரி
சேலத்தில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் 2-ம் ஆண்டில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
கடந்த 10-ந் தேதி கல்லூரியில் நடந்த செய்முறை தேர்வுக்காக மாணவ, மாணவிகள் தங்களது உடமைகளை தங்களது வகுப்பறையில் வைத்துவிட்டு வேறு ஒரு அறைக்கு சென்றனர்.
18 செல்போன்கள் திருட்டு
தேர்வு முடிந்து வந்து பார்த்தபோது, மாணவ, மாணவிகளின் பைகளில் வைக்கப்பட்டு இருந்த செல்போன்கள் மற்றும் பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 18 செல்போன்களும், கல்லூரி கட்டணம் கட்டுவதற்காக மாணவ- மாணவிகள் கொண்டு வந்திருந்த ரூ.30 ஆயிரமும் திருட்டு போய் இருந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் தரப்பில் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கல்லூரி வகுப்பறையில் வைத்திருந்த மாணவ, மாணவிகளின் செல்போன்கள் மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரியில் வகுப்பறைக்குள் துணிகரமாக புகுந்து மாணவ- மாணவிகள் செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.