17-ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு

கோபால்பட்டி அருகே 17-ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-12-17 16:36 GMT

திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், அவரது மாணவர் ரத்தினம் முரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமாமகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள வி.டி.பட்டி ஊராட்சி வி.மேட்டுப்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள நாராயண குளக்கரையில் கணவன்-மனைவி நடுகல்லை கண்டறிந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போது கண்டுபிடித்த கணவன்-மனைவி நடுகல் 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். சிறிய கற்களின் அடுக்குகளால் ஆன குகை போன்ற அமைப்புக்குள் இந்த நடுகல் இருந்தது. அதில் உள்ள ஆண் சிற்பம் இருகரமும் மார்போடு இணைந்து கும்பிட்ட நிலையில் உள்ளது. தலையில் அள்ளிமுடிந்து சவரி கொண்டை முடிச்சில் தொங்கும் குஞ்சம், ஆணின் காதில் வளைகுண்டலம், இடுப்பில் இடைகச்சை ஆடை, தார்பாய்த்து அதில் இருந்து கெண்டைக்கால் வரை மூடிய நிலையில் ஆடை உள்ளது.

பெண் சிற்பத்தில் கொண்டை வலதுபுறத்தில் உள்ளது. காதில் வளைகுண்டலம், மார்பில் ஆரம், இடதுகை தொங்குகரம், டோலி முத்திரை ஆகியவை இடம்பெற்றுள்ளது. வலதுகரம் இடுப்பில் வைத்தபடியும், இடை ஆடை இடுப்பில் சுற்றி கெண்டைக்கால் வரை நீண்டுள்ளது. நடுகல்லில் இடம்பெற்றுள்ள ஆண், அப்பகுதியில் ஆட்சி செய்த நாயக்கர் மன்னர் காலத்தில் முக்கிய அதிகாரியாக இருந்திருக்கலாம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்