'நீட்' தேர்வை 1,759 மாணவ, மாணவிகள் எழுதினர்

கரூர் மாவட்டத்தில் 2 மையங்களில் நடந்த ‘நீட்’ தேர்வை 1,759 மாணவ, மாணவிகள் எழுதினர். 30 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2023-05-07 19:15 GMT

'நீட்' தேர்வு

மருத்துவப்படிப்புக்குரிய நுழைவுத்தேர்வான 'நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் கரூர் வெண்ணைமலை கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காக்காவாடி வேலம்மாள் சீனியர் செகண்டரி பள்ளி ஆகிய 2 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் 'நீட்' தேர்வை எழுத மொத்தம் 1,789 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதனால் தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் நேற்று காலை 10 மணி முதலே வரத்தொடங்கினர்.

கடும் கட்டுப்பாடு

பின்னர் மாணவ, மாணவிகள் தாங்கள் தேர்வு எழுதயுள்ள தேர்வு அறை மற்றும் விதிமுறைகள் குறித்து அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையை பார்த்து தெரிந்து கொண்டனர். அப்போது மாணவர்களுக்கு பெற்றோர்கள் உதவி புரிந்தனர். காலை 11 மணி முதல் மாணவ, மாணவிகள் சோதனை செய்யப்பட்டு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது மாணவ, மாணவிகள் கம்மல், கைக்கெடிகாரம், செயின், கொலுசு போன்ற அணிகலண்கள் அணிந்து செல்லவும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பேனா கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் துப்பட்டா அணிந்து செல்லவும் அனுமதிக்கவில்லை.

பெற்றோர் வாழ்த்து

இதனால் நுழைவுவாயில் பகுதியில் மாணவ, மாணவிகள் தங்களது அணிகலன்கள், கைக்கெடிகாரம் உள்ளிட்ட பொருட்களை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து சென்றனர். தேர்வு எழுத சென்ற மாணவர்களை பெற்றோர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். ஹால்டிக்கெட், 2 புகைப்படம், ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டை, ஸ்டிக்கர் ஒட்டப்படாத தண்ணீர் பாட்டில், சானிடைசர் இவற்றை மட்டும் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பயோமெட்ரிக் மூலம் கைரேகை வைத்தும், புகைப்படம் எடுத்தும் சரிபார்த்த பின்னரே தேர்வு மையத்திற்குள் மாணவ, மாணவிகள் அனுப்பப்பட்டனர். சில மாணவ, மாணவிகள் புகைப்படம் கொண்டு வராமல் இருந்தனர். பின்னர் பெற்றோரை தொடர்பு கொண்டு புகைப்படங்களை பெற்று சென்றனர்.

போலீசார் பாதுகாப்பு

புகைப்படம் இல்லாத மாணவ, மாணவிகளுக்க தேர்வு மையத்தில் பிரத்யேகமாக புகைப்படம் எடுத்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சில மாணவர்கள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். தேர்வு மையத்திற்குள் மதியம் 1.30 மணி வரை மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும்வரை அவர்களது பெற்றோர்கள் வளாகத்தில் காத்திருந்தனர். தேர்வு எழுதி முடித்து வந்ததும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியது குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தனர். தேர்வு மையங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூர் மாவட்டத்தில் நீட் தேர்வை 1759 மாணவ, மாணவிகள் எழுதினர். 30 பேர் ேதா்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்