தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த 17 கடைகளுக்கு அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த 17 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருவட்டார்:
குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கிளாட்சன், பிரவீன் ரகு, ரவி, தங்கசிவம் ஆகியோர் அடங்கிய குழுவினர் குலசேகரம், கல்லடிமாமூடு, செருப்பாலூர், தக்கலை ஆகிய பகுதிகளில் உள்ள 52 கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது 17 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்ததை கண்டு பிடித்தனர். 17 கடைகளில் இருந்து 12¾ கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த ஒரு கடைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 17 கடைகளுக்கு மொத்தம் ரூ.34 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.