சேலத்தில் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்ற பெண்கள் உள்பட 17 பேர் கைது
சேலத்தில் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்ற பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
புகையிலை பொருட்கள்
சேலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாநகர போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி புகையிலை விற்றவர்களை கைது செய்தனர். சேலம் அழகாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் போலீசார் பெரியபுதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்த ஜெயலட்சுமி (வயது 73) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 920 மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
17 பேர் கைது
இதேபோல் அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் நரசிம்மசெட்டி ரோடு மற்றும் லைன்மேடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்த கதிரேசன், சேகர், சையத் சுலைமான், சதீஷ், சையத் பீர், பாக்கியராஜ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் சூரமங்கலம், இரும்பாலை, செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு புகையிலை பொருட்கள் விற்றவர்களை கைது செய்தனர். புகையிலை பொருட்கள் விற்றதாக மாநகரில் மொத்தம் 2 பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.