கஞ்சா வியாபாரிகளின் ரூ.17 லட்சம் சொத்துக்கள் முடக்கம்

புதுக்கோட்டையில் கஞ்சா வியாபாரிகளின் ரூ.17 லட்சம் சொத்துக்களை முடக்கி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-04-19 19:06 GMT

கஞ்சா வழக்கு

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்வதோடு, அவர்களது வங்கி மற்றும் சொத்து கணக்குகளை முடக்கம் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுக்கோட்டையில் கடந்த 2021-ம் ஆண்டு திருக்கோகர்ணம் பகுதியில் போலீசார் அதிரடி சோதனையின் போது ஒரு வீட்டில் 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அப்போது இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் அதிரடியாக கஞ்சா வியாபாரிகளை கைது செய்தனர். இதில் வசந்தி, அவரது சகோதரிகள் ஜானகி, வனிதா மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கஞ்சா விற்பதை தொழிலாக செய்து வந்தனர்.

சொத்துக்கள் முடக்கம்

இந்த நிலையில் கஞ்சா வழக்கில் கைதான வசந்தி, ஜானகி, வனிதா ஆகியோரது வங்கி கணக்குகள் மற்றும் அவர்களது வீடுகள், மொபட் உள்பட ரூ.17 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கம் செய்ய திருக்கோகர்ணம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி அவர்களது சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, கைதாகும் நபர்களின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்படும் போது அதனை அவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களது சொத்துக்கள் முடக்கம் செய்யப்படும் எனவும் மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்