அக்னிபத் திட்டத்துக்கு எதிராக செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் போராட்டம் - 17 பேர் கைது

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-18 09:56 GMT

செங்கல்பட்டு,

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்த அக்னிபத் திட்டத்திற்கு பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பின. குறிப்பாக வடமாநிலங்களில் ரெயில் மறியல் மற்றும் ரெயில்களுக்கு தீவைப்பு சம்பவங்கள், கடைகள் சூறையாடல் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் இந்த போராட்டம் வலுபெற்று வருகின்றன. இதுபோல செங்கல்பட்டில் இந்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்திலிருந்து கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக வந்தனர்.

இவர்கள் செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது முன்னெச்சரிக்கையாக ரெயில் நிலைய முகப்பில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் இருந்த 100-க்கு மேற்பட்ட போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு பெண் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்