மான் இறைச்சி வைத்திருந்த வாலிபர் கைது
மான் இறைச்சி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தத்தை அடுத்த பரதராமி பகுதியில் ஒருவர் மான்கறி விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் பரதராமி சரஸ்வதி நகர் பகுதியில் ஒருவரது வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் மூன்று பிளாஸ்டிக் பைகளில் மான் கறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மான் கறி வைத்திருந்ததாக செல்லமுத்து மகன் நேதாஜி (வயது 30) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.