2 தனியார் கல்லூரி பஸ்கள் உட்பட 16 வாகனங்கள் பறிமுதல்

2 தனியார் கல்லூரி பஸ்கள் உட்பட 16 வாகனங்கள் பறிமுதல்

Update: 2022-06-03 13:19 GMT

போடிப்பட்டி

உடுமலையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 2 கல்லூரி பஸ்கள் உட்பட 16 வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளார்.

ஆவணங்கள்

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் 3 லட்சம் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், மொபட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 1 லட்சம் கார்கள், லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் ஓட்டுநர் உரிமம், காப்பீடு, பதிவுச்சான்றிதழ், உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் விபத்துக்களின் போது இழப்பீடு கிடைக்காத நிலை, வாகனங்கள் திருடு போனால் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாகனங்கள் சாலையில் ஓட்டத் தகுதியானவை தானா என்பதை ஆய்வு செய்து வழங்கக்கூடிய தகுதிச்சான்று இல்லாமலும் பல வாகனங்கள் இயக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து உடுமலை வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி கடந்த சில வாரங்களாக தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த சோதனையின் போது தகுதிச்சான்று காலாவதியாகி 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இயக்கப்பட்டு வந்த தனியார் கல்லூரிக்கு சொந்தமான 2 பஸ்களை பறிமுதல் செய்தார். மேலும் இதுபோல முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 2 லாரிகள், 2 சுற்றுலா வாகனங்கள், 9 சரக்கு ஆட்டோக்கள் மற்றும் ஒரு கேரளா மாநில வாகனம் ஆகியவற்றை அதிரடியாக பறிமுதல் செய்தார்.

கடும் நடவடிக்கை

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடுமலை பகுதியில் சிறுவர்கள் அதிக அளவில் வாகனங்களை இயக்குவது தெரிய வந்துள்ளதால் வாகன உரிமையாளர் மற்றும் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்